Pages

Tuesday, June 21, 2011

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தில் மஸ்லக் பற்றிய பிரச்னைகளே இல்லை: அமீரே ஜமாஅத் பேட்டி - நான்காம் பாகம்


m முஸ்லிம் சமுதாயத்தில் மஸ்லக் தொடர்பான சர்ச்சைகள், விவாதங்கள் இன்றும் நீடிக்கின்றனவே! இன்றும் அனல் பறக்கும் விவாதங்களும் சூடான சர்ச்கைகளும்தாம் புகழ்பெற்ற மார்க்க மதரஸாக்கள் வெளியிடுகின்ற பத்திரிகைகளை ஆக்கிரமித்திருக்-கின்றனவே! (இன்று நாட்டில் பத்திரிகை வெளி-யிடாத மதரஸாவே இல்லை என்கிற அளவுக்கு மதர-ஸாக்கள் அனைத்தும் பத்திரிகைகளை வெளியிட்-டுக்கொண்டிருக்கின்றன) கடந்த 25 ஆண்டுகளில் இந்தச் சமுதாயம் மிகக் கடுமையான நெருக்கடிகளை-யும் மிகப்பெரும் பிரச்னைகளையும் சந்தித்து நிற்-கின்றது. என்றாலும் மஸ்லக் தொடர்பான சர்ச்சை-களுக்கும் சண்டைகளுக்கும் தான் முடிவே இல்லாத நிலைமையைப் பார்க்கின்றோம். நம் நாட்டில் மட்டும் ஏன் இந்த நிலைமை? இதற்கு யார்தான் பொறுப்பு? இந்த நிலைமையை எப்படித்தான் மாற்றுவது? ஒரு மார்க்க அறிஞர் என்கிற நிலையில் உங்களுடைய கருத்துகளைச் சொல்லுங்களேன்.


மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: இன்று நாம் சந்தித்து நிற்கின்ற முக்கியமான முரண்பாட்டை நீங்கள் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். உலகம் முழுவதும் முஸ்லிம்கள் மத்தியில் ஃபிக்ஹு தொடர்பான விவகாரங்களிலும், மஸ்லக் தொடர்பானவற்றிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இந்தக் கருத்துவேறுபாடுகள் இந்தியத் துணைகண்டத்தில் (இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்) முற்றிப்போய் கடுமையாகியிருப்பதைப் போன்ற நிலைமையை உலகில் வேறு எங்குமே பார்க்க முடியாது.

இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, இந்த மஸ்லக்குகளை ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் இவற்றையே சமுதாயத்தின் முக்கியமான பிரச்னையாகப் புரிந்துவைத்திருக்கின்றார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் இவற்றையே உண்மையான மார்க்கமாகவும் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இதனால் தம்முடைய மஸ்லக்குக்கு ஆதரவாக வாதிடுவதை மார்க்கத்திற்குச் செய்கின்ற மிகப்பெரும் சேவையாகவும் இவர்கள் நினைக்கின்றார்கள். மஸ்லக்குகளின் உயிர்நாடியே இந்தப் பிரச்னைகள்தாம் என்று இவர்கள் நினைக்கின்றார்களோ என்றும் தோன்றுகின்றது. இதனால் இவர்கள் எதிராளியின் மஸ்லக்கை சகித்துக்கொள்வதற்கு எந்த நிலையிலும் முன் வர மாட்டார்கள்.

இது தொடர்பாக இரண்டு விஷயங்களைக் கருத்தில் கொள்வது அவசியமாகும்.

முதலாவதாக மஸ்லக் தொடர்பான இந்தக் கருத்து வேறுபாடுகள் மார்க்கம், ஷரீஅத் தொடர்பான கொள்கை சார்ந்த கருத்துவேறுபாடுகள் கிடையாது. அதற்கு மாறாக இந்தக் கருத்துவேறுபாடுகள் அனைத்தும் சில சட்டங்கள், பிரச்னைகள் தொடர்பானவையே. அந்தச் சட்டங்கள், பிரச்னைகள் குறித்து ஷரீஅத்தின் நிலைப்பாட்டை அறிய முற்படும்போது ஏற்படுகின்ற கருத்து வேறுபாடுகள்தாம் இவை. இந்தப் பிரச்னைகளோ மார்க்கத்தின் அடிப்படைகளுடன் தொடர்புள்ள பிரச்னைகள் அன்று. அதற்கு மாறாக அவை கிளைப் பிரச்னைகளாக, பகுதிப் பிரச்னைகளாகத்தான் இருக்கின்றன. குர்ஆனும் நபிவழியும்தாம் இறுதி ஆதாரங்கள் என அனைத்து மஸ்லக்குகளைச் சேர்ந்தவர்களும் ஏற்றுக்கொள்கின்றார்கள். அதன்படித்தான் செயல்படுகின்றோம் என்றே அனைவரும் வாதிடுகின்றார்கள். ஆனால் சில சட்டங்கள், பிரச்னைகள் தொடர்பாக அவற்றுக்குச் சான்றாக முன்வைக்கப்படுகின்ற சான்றுகள் குறித்துதாம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. எந்தவொரு மஸ்லக்கையும் ஆதாரமற்றது என்று சொல்லிவிட முடியாது. அனைத்துமே தமக்கென ஆதாரங்களையும் சான்றுகளையும் கொண்டிருக்கின்றன. இந்தச் சான்றுகளை மையப்படுத்தித்தான் வாதங்களும் சர்ச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் சான்றுகளின் அடிப்படையில் எந்தப் பிரச்னையில் எந்த மஸ்லக்குக்கு முன்னுரிமை இருக்கின்றது என்கிற கோணத்தில்தான் விவாதம் நடக்கின்றது. இதனை நெஞ்சத்தில் பசுமையாக வைத்திருந்தால் கருத்துவேறுபாட்டில் கடுமையோ, தீவிரமோ ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை.

இந்த மஸ்லக்குகள் தொடர்பாக சர்ச்சைகள், வாதவிவாதங்களில் மூழ்கிப்போவதால் தீனின் உண்மையான நோக்கம், அதன் அடிப்படைக் கோட்பாடுகள் ஆகியவை அமுங்கிப் போகின்றன; இறைவனுடனும் இறைத்தூதருடனும் தொடர்பும் பற்றும் மழுங்கிப் போகின்றன; நடத்தையிலும் எண்ணத்திலும் உயர்ந்தோங்க வேண்டும் என்கிற ஆசையும் கைரே உம்மத்தாக இருக்கின்றோம் என்கிற எண்ணத்தெளிவும், தன்னுடைய வெற்றிக்காகவும் உலகின் வெற்றிக்காகவும் அந்த மார்க்கத்திற்காக சுறுசுறுப்பாக செயல்பட்டாக வேண்டும் என்கிற கடமையுணர்வும் மறந்துபோகின்றன; இன்றைய காலத்தில் இஸ்லாம்தான் ஒரே மாற்றாக இருக்கின்றது என்கிற உண்மையும் இதுபோன்ற அடிப்படையான விவகாரங்களும் பார்வையிலிருந்தும் சிந்தனையிலிருந்தும் விலகிப்போய்விடுகின்றன. இன்னும் சொல்லப்போனால் இது போன்ற விஷயங்கள் நம்முடைய பேச்சிலும் விவாதத்திலும் இடம்பெறாமலே போய்விடுகின்றன.

மார்க்கத்தைப் பற்றிய சரியான கருத்தோட்டமும் தற்போதைய நிலைமைகளில் அது நம்மிடம் வேண்டுவன எவை என்பவற்றைப் பற்றிய விழிப்புணர்வு நம்முடைய நெஞ்சங்களில் இருக்குமேயானால், இந்தக் கிளைப் பிரச்னைகளிலும் சின்னச் சின்ன சர்ச்சைகளிலும் நாம் சிக்கிக்கொள்ளவே மாட்டோம். மற்றவர்கள் செய்கின்ற இஜ்திஹாதையும் செயல்முறையையும் மகிழ்ச்சியுடன் சகித்துக்கொள்வோம். தொடக்கக்காலத்தில் நபித்தோழர்கள் அப்படித்தான் நடந்துகொண்டார்கள். அவர்களுக்கிடையிலும் சில பிரச்னைகளில் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கின்றன. ஆனால் அந்தக் கருத்து வேறுபாடுகளை வைத்துக்கொண்டே அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றார்கள். மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைக்கின்ற பணியிலும் மார்க்கத்தை மேலோங்கச் செய்கின்ற போராட்டத்திலும் தோளோடு தோள் நின்று பங்கேற்றார்கள். அந்த அழகிய முன்மாதிரியை ஏற்றுச் செயல்பட வேண்டிய தேவை இருக்கின்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தில் இந்த மஸ்லக் பற்றிய பிரச்னைகளே இல்லை என மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்கின்றேன். மஸ்லக் பற்றிய கருத்து வேறுபாடுகளின் தீவிரத்தையும் கடுமையையும் கட்டுப்படுத்துவதில் ஜமாஅத் பெருமளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் ஒரு வகையில் அவற்றை முற்றாக ஒழித்துவிட்டிருக்கின்றது என்றே சொல்வேன். ஜமாஅத் அன்பர்களில் வெவ்வேறு மஸ்லக்குகளை ஏற்றுக்கொண்டிருக்கின்றவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் யார் எந்த மஸ்லக்கைப் பின்பற்றுகின்றார் என்கிற அளவிலும் கூட ஜமாஅத் அன்பர்கள் விசாரித்துக்கொள்வதுமில்லை; அது பற்றிய சர்ச்சையே மூள்வதில்லை. இகாமத்தே தீன் - தீனை நிலைநாட்டுதல் என்கிற உயர்ந்த, சிறந்த குறிக்கோள் ஜமாஅத் ஊழியர்களை ஓரணியில் நிற்க வைத்திருக்கின்றது. இதே போன்று ஜமாஅத்துடன் தொடர்புடைய மார்க்க மதரஸாக்கள், நிறுவனங்களிலும் கூட ஃபிக்ஹு நிலைப்பாடுகள் பற்றி விவாதம் நடந்தாலும் ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று எவர் மீதும் எந்தவோர் மஸ்லக்கும் திணிக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக, தாமாக நிலைப்பாடு ஒன்றை எடுத்துக்கொள்வதற்கு எல்லாருக்கும் சுதந்திரம் தரப்படுகின்றது.  

தமிழில்
: T. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
This is the concluding part of the interview of Ameer-e-Jamaat
Parvaz Rahmani, Editor, Dawat interviews Moulana Syed Jalaludeen Umari, Ameer-e-Jamaat. Translated by T Azeez Luthfullah. More Here 
and Here and Here and Here

1 comment:

Hanifa said...

assalamu alaikkum brother if u create a tamil site, it will be very useful

Translate

Related Posts Plugin for WordPress, Blogger...