m தேர்தல் அரசியலில் பங்கேற்பது பற்றிய விவகாரத்தில் ஜமாஅத்துக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் தேர்தல் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாகவும் இது நம்முடைய கோட்பாட்டுக்கும் சிந்தனைக்கும் நேர்மாறானது என்றும் இப்போதையச் சூழலில் தேர்தல் அரசியலில் பங்கேற்பது என்றும் மற்றவர்கள் எதிர்ப்பதாகவும் விஷயம் தெரிந்தவர்கள் மத்தியில் ஒரு கருத்து காணப்படுகின்றது. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ?
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: தற்போது உள்ள ஸிஸ்டம் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டது, அசத்தியமானது என்பதிலும் இந்த ஸிஸ்டத்தை மாற்றுவதற்காக ஜமாஅத் பாடுபட வேண்டும் என்பதில் எந்தவிதமான கருத்துவேறுபாடும் இல்லை.
ஆனால் இப்போது நம்முடைய விவாதத்தில் இருக்கின்ற விவகாரம் இந்திய முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்னைகளுடன் தொடர்புடையதாகும். அவர்கள் சிறுபான்மையினராக இருப்பதால் இந்தப் பிரச்னைகள் இன்னும் அதிகமாகக் கூர்மையடைந்துவிட்டுள்ளன.
தேர்தல் அரசியலில் பங்கேற்பது மூலமாக முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க முடியுமா என்பதுதான் இங்கு எழுகின்ற கேள்வி.
இதற்குத் தீர்வுகாண்பதில் இருவேறு கருத்துகள் காணப்படுகின்றன என்பது உண்மையே. அதனைத்தான் நீங்களும் சுட்டிக்காட்டியிருக்கின்றீர்
அண்மையில் நடந்த ஜமாஅத்தின் மத்திய பிரதிநிதிகள் சபை கூட்டத்தில் பேசியபோது ‘நம் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் செக்குலரிஸம், சோஷலிஸம், டெமாக்ரஸி ஆகிய சொற்கள் ஒரு தனிப் பொருளில்தான் ஆளப்பட்டிருக்கின்றன. சோஷலிஸம் குறித்து நாட்டின் உச்ச நீதிமன்றம் ‘சோஷலிஸம் என்கிற சொல் தொடக்கக்காலத்தில் எந்தப் பொருளில் ஆளப்பட்டதோ அந்தப் பொருளில் நாம் அதனை ஆள்வதில்லை. அதற்கு மாறாக சமூக நீதி என்கிற பொருளில்தான் தற்போது ஆளப்படுகின்றது’ எனக் கருத்து தெரிவித்துள்ளது.
மௌலானா அபுல் லைஸ் இஸ்லாஹி நத்வி |
செக்குலரிஸத்தைப் பொருத்தவரை ரொம்பக் காலத்திற்கு முன்பே அப்போதைய அகில இந்தியத் தலைவர் மௌலானா அபுல் லைஸ் இஸ்லாஹி நத்வி மிகத் தெளிவாக எடுத்துரைத்துவிட்டார். அந்தக் காலத்தில் டாக்டர் சையத் மஹ்மூத் ‘செக்குலரிஸம் குறித்து உங்களுடைய கருத்து என்ன?’ என வினவிய போது மௌலானா அபுல் லைஸ் இஸ்லாஹி நத்வி அவர்கள் ‘செக்குலரிஸம் என்பதற்கு இந்த நாட்டில் எந்தவொரு மதத்தின் ஆட்சியும் இருக்காது; அனைத்து மதத்தினரும் சமமாக நடத்தப்படுவார்கள்; அனைவருக்கும் தத்தமது மதத்தின் அடிப்படையில் செயல்படுவதற்கு முழுமையான சுதந்திரம் உண்டு’ என்பதுதான் பொருள் எனில் நாங்கள் அந்த செக்குலரிஸத்திற்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் செக்குலரிஸம் என்பதற்கு இறைவனின் ஆட்சியையும் இறையாண்மையையும் இறைவனின் அதிகாரத்தையும் மறுப்பதுதான் பொருள் எனில் நாங்கள் அதனை எதிர்ப்போம்’ என்று நறுக்குத்தெறித்தாற்போல் பதிலளித்தார். பிற்பாடு மத்திய ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டு மௌலானாவின் விளக்கம் உறுதி செய்யப்பட்டது.
ஜனநாயகம் தொடர்பாகவும் இதே நிலைப்பாடுதான். நான் இதனைக் குறித்து எத்தனையோ தடவை எழுதியிருக்கின்றேன். இறைவனின் அதிகாரத்திற்குப் பதிலாக மனிதர்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதுதான் ஜனநாயகம். இதனை நாங்கள் தவறான சிந்தனை என்றே சொல்கின்றோம். ஆனால் ஜனநாயகத்திற்கு இருக்கின்ற சிறப்பு என்னவெனில் அது கருத்து சுதந்திரத்தையும் விருப்பம் போல் செயல்படுகின்ற சுதந்திரத்தையும் வழங்குவதுதான். இந்தச் சுதந்திரமான சூழல் அழைப்புப் பணிக்கும் பரப்புரை செய்வதற்கும் சமூக சீர்திருத்தப் பணிகளுக்கும் களம் அமைத்துத் தருகின்றது. இதனால் தான் இத்தகைய சுதந்திரத்தையும் உரிமைகளையும் மறுக்கின்ற, ஒரு குறிப்பிட்ட பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் நாட்டு மக்கள் அனைவர் மீதும் திணிக்க நாடுகின்ற மற்ற ஸிஸ்டங்களோடு ஒப்பிடும்போது ஜனநாயகத்தின் அடிப்படையிலான சிஸ்டத்தை நாங்கள் விரும்புகின்றோம்.
நமது நாட்டில் ஜனநாயகம் நிலைபெற்றுள்ளது. இதிலிருந்து பயனீட்டுவதற்கு நாம் முயல வேண்டும். இஸ்லாத்தை நல்ல முறையில் அறிமுகம் செய்வதற்கும் முயல வேண்டும். இஸ்லாத்தைக் குறித்து இங்குக் காணப்படுகின்ற தவறான கருத்துகள், எண்ணங்களைக் களைவதற்கும் முயல வேண்டும். இஸ்லாத்தை மேற்கொள்வதில் நாட்டின் வெற்றியும் உலகத்தின் நன்மையும் அடங்கியிருக்கின்றது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். எந்தவொரு மதமோ அல்லது மார்க்கமோ அரசாங்க மதமாக அறிவிக்கப்படுவதற்கு ஜனநாயகம் தடையாக இருக்கும் என்றும் சிலர் சொல்கின்றார்கள். ஜனநாயக வழியில் செயல்பட்டு இந்தத் தடையை அகற்றுவதற்கான பொருத்தமான வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன்.
Parvaz Rahmani, Editor, Dawat interviews Moulana Syed Jalaludeen Umari, Ameer-e-Jamaat. Translated by T Azeez Luthfullah. More Here
No comments:
Post a Comment