Pages

Tuesday, June 14, 2011

அமீரே ஜமாஅத் பேட்டி - இரண்டாம் பாகம்

m உலகளாவிய அளவில் விவாதிக்கப்படுகின்ற, கருத்துப் பரிமாற்றம் செய்யப்படுகின்ற விவாதப் பொருளாக இஸ்லாத்தை ஆக்க வேண்டும்; இவ்வாறாக உலக அளவில் முடுக்கிவிடப்பட்டுள்ள இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரப் புயலிலிருந்து வெளி வருகின்ற பாதை புலப்பட்டுவிடும் என்றும் நீங்கள் சொல்லி வந்துள்ளீர்கள். இப்போது மேற்கத்தியர்களும் எந்தவிதமான பக்கச்சார்பும் இல்லாமல் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் இஸ்லாத்தை ஆராய்வதற்கு முன் வந்துள்ளார்கள் என இப்போது தோன்றுகின்றது. இது தொடர்பாக அண்மையில் வெளியான ‘ஏ வர்ல்ட் வித் அவுட் இஸ்லாம்’ என்கிற நூலைச் சொல்லலாம். அமெரிக் உளவு நிறுவனமான ஸி.ஐ.ஏ.வில் பல்லாண்டுகள் பணியாற்றிய மூத்த உளவுத்துறை அதிகாரி கிரஹாம் ஃபுல்லர் என்பவர் இந்த நூலை எழுதியிருக்கின்றார். மேற்கிலும் கிழக்கிலும் இந்த நூல் பரவலாகப் பேசப்படுகின்றது. இஸ்லாத்தைக் குறித்து மேற்கத்திய உலகம் கொண்டுள்ள நிலைப்பாட்டை பக்கச்சார்புள்ளது; துவேஷமும் காழ்ப்பு உணர்வும் கொண்டது என்று கிரஹாம் ஃபுல்லர் கடுமையாக விமர்சித்து ஒதுக்கியிருக்கின்றார். இஸ்லாத்தை அதன் மூல நூல்களிலிருந்து கற்றுக்கொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் முன் வர வேண்டும். இதுதான் காலத்தின் கட்டாயம் என்றெல்லாம் அவர் எழுதியிருக்கின்றார். இதனை வரவேற்கத்தக்க மாற்றம் என்று சொல்லலாமா?  


மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: இஸ்லாத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அவதூறு பிரச்சாரத்தின் விளைவாக மக்கள் மத்தியில் இஸ்லாத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்கிற தாகத்தை உண்டுபண்ணியிருக்கின்றது என்பதில் ஐயம் இல்லை. இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதற்கு நல்லதொரு வாய்ப்பை அது உருவாக்கியிருக்கின்றது என்பதும் சரியே.
கிரஹாம் ஃபுல்லர் எழுதிய புத்தகத்தையும் நாம் இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும். என்னால் அந்த நூலை முழுமையாக வாசிக்க இயலவில்லை. என்றாலும் அந்த நூல் பற்றிய விமர்சனங்கள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். கிரஹாம் ஃபுல்லரின் துணிவைப் பாராட்டத்தான் வேண்டும்.
இங்கு ஒரு விஷயத்தை நாம் மறந்துவிடக்கூடாது. மேற்கத்திய உலகம் இஸ்லாத்தைப் போட்டியிடுகின்ற சக்தியாகத்தான் காலங்காலமாகப் பார்த்து வந்துள்ளது. அந்த அடிப்படையில்தான் அது இஸ்லாத்தை கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாக்கி வருகின்றது. நிலைமைகளுக்கேற்ப இந்த விமர்சனங்களின் பாணியும் இலக்கும் மாறும். அவர்கள் சில சமயம் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே குறிவைத்து விமர்சிப்பார்கள். சில சமயம் அண்ணல் நபிகளாரின் அழகிய வாழ்வை விமர்சிப்பார்கள். சில சமயம் வஹீ, தூதுத்துவ ஏற்பாட்டை விமர்சிப்பார்கள். சில சமயம் இஸ்லாத்தின் குடும்ப அமைப்பை விமர்சிப்பார்கள். சில சமயம் இஸ்லாத்தின் பொருளாதார அமைப்பை விமர்சனத்திற்கு உள்ளாக்குவார்கள். இந்த விமர்சனங்கள் அனைத்தும் அடிப்படையற்றவை என்பது ஒரு புறம் இருக்க கேலி, கிண்டல்களாகவும் இவை ஆக்கப்படுவதுண்டு.
இந்த நிலையில் 9/11க்குப் பிறகு இஸ்லாத்தை பயங்கரவாதத்தின் ஊற்றாகச் சித்திரிப்பதற்கு திட்டமிட்ட முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இஸ்லாமிய இயக்கங்களைக் குறி வைத்து விமர்சனங்கள் தொடுக்கப்பட்டன. இன்னும் ஒரு படி மேலே போய் பயங்கரவாதம், வன்முறை, சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றைத் தூக்கி வைத்துக்கொண்டாடுவதுதான் இஸ்லாம்; இந்த இயக்கங்களும் அதிலிருந்துதான் வழிகாட்டுதலையும் ஊக்கத்தையும் பெறுகின்றன என்றெல்லாம் சகட்டுமேனிக்கு அவதூறுகள் பரப்பப்பட்டன.
கிரஹாம் ஃபுல்லர்
ஆனால் எந்தவித பக்கச்சார்பும் இல்லாமல், இஸ்லாத்தைப் பற்றியோ முஸ்லிம்களைக் குறித்தோ எத்தகைய காழ்ப்புணர்வும் இல்லாமல், எந்தவித முன்முடிவும் இல்லாமல், திறந்த மனத்துடன் இஸ்லாத்தை ஆழ்ந்து படிக்கின்ற எவரும் இஸ்லாத்திற்கு எதிரான இந்தப் பரப்புரைகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை; அடிப்படையற்றவை என்கிற முடிவுக்கே  வருவார். கிரஹாம் ஃபுல்லரும் அவருடைய நூலும் இதனைத்தான் பிரதிபலிக்கின்றன.
என்னைக்கேட்டால் எந்தவொரு விவகாரத்திலும் இஸ்லாத்தின் பார்வையைப் புரிந்துகொள்வதற்காக முயல்வாரேயானால் அவர் நிச்சயமாக நீதியும் நியாயமும் செறிந்த அதன் போதனைகளில் மனத்தைப் பறிகொடுத்துவிடுவார்; இஸ்லாத்திற்கு எதிராகத் தொடுக்கப்படுகின்ற ஆட்சேபங்களை அடிப்படையற்றவை என ஒதுக்கித்தள்ளிவிடுவார் என்றே சொல்வேன். என்றாலும் இவ்வாறு ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வகையான ஆய்வு இஸ்லாத்தைப் பற்றி ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகவோ, இஸ்லாத்தின் ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தை மட்டும் கவனத்தில் கொள்ளப்பட்ட ஆய்வாகவோ அமைந்துவிடுகின்றன. இதுதான் இவ்வகையான ஆய்வுகளில் பொதிந்து இருக்கின்ற குறை ஆகும்.
இஸ்லாத்தைப் பற்றி ஆய்வு செய்யத்தொடங்கும்போது முதலில் அதன் அடிப்படைகள், அடிப்படைக் கோட்பாடுகள் ஆகியவற்றை ஆழ்ந்து வாசிக்க வேண்டும். பிறகு அதன் ஒளியில் குறிப்பிட்ட பிரச்னையில் அது முன்வைக்கின்ற போதனைகளைப் புரிந்துகொள்வதற்கு முயல வேண்டும். இஸ்லாத்தின் கோட்பாடுகள்தாம் அதன் அடிப்படைகளாக இருக்கின்றன. இஸ்லாம் நாத்திகத்தையும் இணைவைப்பையும் எதிர்க்கின்றது. அவற்றுக்கு எதிராக கலப்படமற்ற, மாசற்ற தூய்மையான ஓரிறைக் கோட்பாட்டை அது முன்வைக்கின்றது. அது இந்த உலக வாழ்வை மனிதனின் இறுதி இலக்காகப் பார்ப்பதில்லை. அதற்குப் பதிலாக மறுமை, நற்கூலி, தண்டனை பற்றியக் கருத்தோட்டத்தை அது முன்வைக்கின்றது. அறிவைத் தேடியடைவதற்காக மனிதனுக்குக் கிடைத்திருக்கின்ற வழிவகைகளை அது போதுமானவையாகக் கருதுவதில்லை. இறைவழிகாட்டுதல் இன்றி மனிதனால் வாழ்க்கைத்திட்டத்தை அமைத்துக்கொள்ள முடியாது என அது அழுத்தம்திருத்தமாக வாதிடுகின்றது. அதற்காக வஹீ, தூதுத்துவம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொள்வது அவசியம் என அது அறிவிக்கின்றது. அண்ணல் நபிகளாரை இறுதித்தூதராகவும் திருக்குர்ஆனை இறுதி வேதமாகவும் அறிமுகப்படுத்துகின்றது. அது மனிதனை இறைவனின் அடியானாக, இறைவனிடம் பதில் அளிக்கக் கடமைப்பட்டவனாக அறிவிக்கின்றது. மனிதர்களிடையே சமத்துவம் கட்டிக்காக்கப்பட வேண்டும்; மனிதநேயம் மலர வேண்டும் என்றே அது எதிர்பார்க்கின்றது. மனிதன் மீது இன்னொரு மனிதனின் ஆதிக்கத்தை தவறு என்று அது ஒதுக்குவது இந்த சமத்துவத்தின் ஒரு பரிமாணம்தான். அதற்குப் பதிலாக இறைவனின் ஆட்சி என்கிற கருத்தோட்டத்தை அது முன்வைக்கின்றது. இஸ்லாத்தின் இந்த அடிப்படைக் கோட்பாடுகளையும் போதனைகளையும்தான் விவாதப் பொருளாக ஆக்க வேண்டும்.

இஸ்லாத்தின் அடிப்படைக்கோட்பாடுகளில் பொதிந்துள்ள விவேகங்கள் ஏராளம். ஏராளம். இன்னும் அதிகமான விவேகங்களையும் தேடியடைய முடியும். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. திருக்குர்ஆன்தான் இறுதி வேதம் என்பதையும் ஃபைனல் அத்தாரிட்டி என்பதையும் ஒருவர் ஏற்றுக்கொள்வாரேயானால் அது முன்வைக்கின்ற எந்தவொரு போதனை குறித்தும் அவர் ஆட்சேபிக்க மாட்டார். ஆனால் இப்போது எழுதப்படுகின்ற புத்தகங்களில் இந்தக் கோணத்தில் எதுவுமே விவாதிக்கப்படுவதில்லை. இந்தக் கோணத்தில் இந்தப் பாணியில் இஸ்லாம் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுஜீவிகள் குர்ஆனின் அடிப்படைக்கோட்பாடுகளை ஆய்வு செய்யவேண்டும் என்றும்தான் நாம் விரும்புகின்றோம்.  
தமிழில் : T.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
This is the second part of the interview of Ameer-e-Jamaat
Parvaz Rahmani, Editor, Dawat interviews Moulana Syed Jalaludeen Umari, Ameer-e-Jamaat. Translated by T Azeez Luthfullah. More Here

No comments:

Translate

Related Posts Plugin for WordPress, Blogger...