Pages

Thursday, April 27, 2017

ஜமாஅத்தே இஸ்லாமி நடத்தி வரும் முஸ்லிம் தனியார் சட்ட விழிப்பு உணர்வு பரப்புரைக்கு சமுதாயத் தலைவர்கள் பேராதரவு!



நம் நாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் (இஸ்லாம் எடுத்துரைக்கின்ற குடும்பவியல் சட்டம்) ஒரு பக்கம் வெளித் தாக்குதல்களுக்கு இலக்காகி நிற்கின்றது எனில், மறுபக்கம் சமுதாயத்துக்குள்ளும் சவால்களைச் சந்தித்து நிற்கின்றது. வெளித் தாக்குதல்களின் ஒரு பரிமாணமாக நீதிமன்றங்களில் வெளியிடப்பட்டு பிற்பாடு சட்ட அந்தஸ்தைப் பெற்று விடுகின்ற ஷரீஅத் விரோத தீர்ப்புகள் இருக்கின்றனவெனில், இன்னொரு பரிமாணமாக மக்களவை, சட்டப்பேரவை போன்ற சட்டங்களை இயற்றுகின்ற அவைகளின் வழியாக பிறப்பிக்கப்படுகின்ற ஷரீஅத்துக்கு எதிரான சட்டங்கள் இருக்கின்றன. மூன்றாவது பரிமாணமாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்  நாற்பத்தி நான்காவது பிரிவு இருக்கின்றது. இந்த அரசியல் சட்டப் பிரிவை மேற்கோள் காட்டித்தான் சில சமயம் நீதிமன்றங்களும் சில சமயம் மத்திய அரசாங்கமும் சில அரசியல் கட்சிகளும் பொது சிவில் சட்ட சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

இந்த மூன்று வகையான தாக்குதல்களிலிருந்தும் முஸ்லிம்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. ஒரே ஒரு நிபந்தனை என்னவெனில், அவர்கள் முதலில் தங்களின் வாழ்வில் ஷரீஅத் சட்டங்களை முழுமையாகப் பேணி நடந்துகொள்வதுடன் அவர்களின் சமூகமும் ஷரீஅத்துக்கு நேர் எதிராக நடப்பதிலிருந்து முற்றிலும் விலகி இருத்தல் வேண்டும். மேலும் அவர்கள் குடும்ப வாழ்வு தொடர்பான தங்களின் வழக்குகளை நாட்டின் நீதிமன்றங்களுக்குக் கொண்டு சென்று அங்கு அவற்றைத் தீர்த்துக்கொள்வதற்குப் பதிலாக தாருல் கஸாக்கள், ஷரீஅத் பஞ்சாயத்துகள், கவுன்சிலிங் சென்டர்கள் ஆகியவற்றின் மூலமாக அவற்றைத் தீர்த்துக் கொள்ள முன் வர வேண்டும்.

இதே போன்று நிகாஹ், தலாக், வாரிசுரிமை, மஹர், நஃப்கா மற்றும் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான பிற விவகாரங்கள் அனைத்திலும் முஸ்லிம் சமுதாயம் ஷரீஅத்தின் அடிப்படையில் செயல்படத் தொடங்கிவிடுமேயானால் அது அமைதியும் நிம்மதியும் நிறைந்த நந்தவனமாக மாறிவிடுவதுடன், அதற்கும் மேலாக, சகோதர சமுதாயங்களைச் சேர்ந்தோரும் இஸ்லாமியக் குடும்பவியல் சட்டங்களின் பயன்பாட்டையும், மனித இயல்புக்கு இயைந்து போகின்றவையாய் அவை இருப்பதையும், மனித வாழ்வில் அவற்றால் முகிழ்கின்ற நற்கனிகளையும் பார்த்து உணர்ந்து தாக்கம் பெறுவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன.

ஆனால் வாய்ப்புக்கேடாக, இறைவனாலும் இறைத்தூதராலும் வகுத்துத் தரப்பட்ட சட்டங்கள் இன்று முஸ்லிம் சமூகங்களிலும் வெளிப்படையாக மீறப்படுகின்றன. இந்த மீறல்களுக்குக் காரணம் ஷரீஅத் சட்டங்கள் பற்றிய அறிவின்மையானாலும் சரி, இந்துக் கலாச்சாரத்தினால் விளைந்த பாதிப்புகளால் உருவாகின்ற சமூகச் சீர்கேடுகளானாலும் (வரதட்சிணை, மணமகன் ஊர்வலம், திருமணங்களின்போது கடைப்பிடிக்கப்படும் வீணான சடங்குகள், வீண் விரயங்கள் முதலியன) சரி, சமூகத்துக்குள் நிகழ்கின்ற இந்த அவலங்கள்தாம் முஸ்லிம் தனியார் சட்டம் மீது தொடுக்கப்படுகின்ற வெளித் தாக்குதல்களை விட மிக அதிகமாக பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் சமுதாயச் சீர்கேடுகளும், ஷரீஅத் சட்டங்களைப் பற்றிய அறிவின்மையும், ஷரீஅத்துக்கு எதிரான நடத்தைகளும்தாம் பெரும்பாலான வெளித் தாக்குதல்களின் வித்துகளாய் இருக்கின்றன.

இந்த நிலைமைகளில் முஸ்லிம்கள் அனைவரும் தங்களின் வாழ்வின் அனைத்து விவகாரங்களிலும் எந்தவிதமான தயக்கமோ, தடுமாற்றமோ இன்றி இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கீழ்ப்படிந்து நடப்பது அவசியமாகும்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து முஸ்லிம் சமுதாயத்தைச் சீர்திருத்துவதில் நம்முடைய ஒட்டுமொத்த வலிமையையும் சக்தியையும் செலவிடுவது கட்டாயம் என்பதைத்தான் தற்போதை நிலைமைகள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன. மேலும் குடும்ப வாழ்வு தொடர்பான சட்டங்களையும் நெறிமுறைகளையும் முஸ்லிம்களுக்குப் போதிப்பதிலும் நாம் கவனம் செலுத்தியாக வேண்டும். மேலும் குடும்ப வாழ்வில் வெடித்துக்கொண்டிருக்கின்ற சீர்கேடுகளையும், வெளிப்படையாக அரங்கேறி வருகின்ற விதிமீறல்களையும் களைவதற்காக பொருத்தமான வியூகங்களை மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக குடும்ப வாழ்வு தொடர்பான தங்களின் வழக்குகளை இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின் அடிப்படையில் ஷரீஅத் பஞ்சாயத்துகள், தாருல் கஸாக்கள் வழியாக தீர்த்துக்கொள்வதற்காக முஸ்லிம்களை ஆயத்தப்படுத்துவதும் அவசியமாகும்.

மேலும் குடும்ப வாழ்வு தொடர்பான இஸ்லாமியச் சட்டங்கள் உண்மையில் மனித இயல்புக்கு இயைந்து போகின்றவையாய் இருக்கின்றன என்கிற தெளிவு பிறக்கின்ற வகையிலும் அன்பு, ஒழுக்கம், நீதி, நியாயம், நடுவுநிலை ஆகியவை நிறைந்தவையாய், குடும்ப வாழ்வில் இனிமையையும் பெருமகிழ்வையும் அளிப்பவையாய், நலமான குடும்ப அமைப்பைத் தோற்றுவிப்பவையாய், தூய்மையான சமூகத்தைக் கட்டி எழுப்பக்கூடிய வல்லமை படைத்தவையாய்  முஸ்லிம் தனியார் சட்டங்கள் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்கின்ற வகையிலும்  சகோதர சமுதாயங்களைச் சேர்ந்தோரிடம் இந்தச் சட்டங்களை அறிமுகப்படுத்துவதும் அவசியமாகும். இன்னும் சொல்லப்போனால் பெண்ணின் மானத்தையும், மரியாதையையும், மாண்பையும் உரிமைகளையும் பாதுகாக்கின்ற சட்டம்தான் முஸ்லிம் தனியார் சட்டம் என்பதையும்  பெண்ணின் பிறப்புரிமையைக் பாதுகாக்கின்ற கேடயம்தான் முஸ்லிம் தனியார் சட்டம் என்பதையும் நாட்டு மக்களுக்கு உணர்த்துவதும் அவசியமாகும். இந்த விஷயத்தில் எல்லா மார்க்க ஜமாஅத்களும் மத்ஹப்களைச் சார்ந்தோரும் தனிக் கவனம் செலுத்துவதும் அவசியமாகும். மேற்படி நோக்கங்களை அடைகின்ற நோக்கத்துடன் ஏப்ரல் 23 முதல் மே 7 வரை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நடத்தி வருகின்ற முஸ்லிம் தனியார் சட்ட விழிப்பு பரப்புரையில் இயன்ற வரை அனைத்து வகையான ஒத்துழைப்பையும் அளிப்பது அவசியமாகும்.

ஜனாப் மௌலானா சையத் முஹம்மத் ராபே ஹஸனி நத்வி சாஹிப்
(தலைவர், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்)
(நாஜிம், நத்வத்துல் உலமா, லக்னௌ)

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி
(துணைத் தலைவர் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்)
(அமீர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்)

ஜனாப் மௌலானா முஹம்மத் ஸாலிம் காஸிமி சாஹிப்
(துணைத் தலைவர், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்)
(காப்பாளர், தாருல் உலூம் (வக்ஃப்) தேவ்பந்த்)

ஜனாப் மௌலானா காகா ஸயீத் அஹ்மத் உமரி சாஹிப்
(துணைத் தலைவர், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்)
(ஜாமிஆ தாருஸ்ஸலாம், உமராபாத்)

ஜனாப் மௌலானா சையத் கல்பே சாதிக் சாஹிப்
(துணைத் தலைவர், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்)

 ஜனாப் மௌலானா முஹம்மத் வலீ ரஹ்மானி சாஹிப்
(பொதுச் செயலாளார், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்)
(அமீரே ஷரீஅத், பீகாரி, ஒரிஸ்ஸா)

ஜனாப் மௌலானா சையத் அர்ஷத் மதனி சாஹிப்
(செயற்குழு உறுப்பினர், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்)
(தலைவர், ஜமிய்யத்துல் உலமா ஹிந்த்)

ஜனாப் மௌலானா அபுல்காஸிம் நுஃமானி சாஹிப்
(நிர்வாகி, தாருல் உலூம் தேவ்பந்த்)

ஜனாப் மௌலானா சையத் மஹ்மூத் அஸத் மதனி சாஹிப்
(பொதுச் செயலாளர், ஜமிய்யத்துல் உலமா ஹிந்த்)
(செயற்குழு உறுப்பினர், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்)

ஜனாப் மௌலானா காலித் சைஃபுல்லாஹ் ரஹ்மானி சாஹிப்
(செயலாளர், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்)
(தலைவர், ஃபிக்ஹு அகாடமி)

ஜனாப் மௌலானா ஃபஸலுர் ரஹீம் முஜத்ததி சாஹிப்
(செயலாளர், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்)
(நிர்வாகி, ஜாமிஆ ஹிதாயா, ஜெய்பூர்)

ஜனாப் மௌலானா அலீ அஸ்கர் இமாம் மஹ்தி சாஹிப்
(செயற்குழு உறுப்பினர், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்)
(பொது நிர்வாகி, மர்கஸி ஜமிய்யத் அஹ்லே ஹதீஸ் ஹிந்த்)

ஜனாப் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான் சாஹிப்
(ஆசிரியர், மில்லி கெஜட்)
(முன்னாள் தலைவர், அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரத்)

ஜனாப் நவீத் ஹாமித் சாஹிப்
(தலைவர், அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரத்)

ஜனாப் மௌலானா காலித் ரஷீத் ஃபரங்கி மஹல் சாஹிப்
(செயற்குழு உறுப்பினர், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்)
(துணை இமாம், ஈத்காஹ், லக்னௌ)

Translate

Related Posts Plugin for WordPress, Blogger...