Pages

Saturday, October 22, 2011

இந்தத் தோல்வி ஏன்


வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் நல்லாதரவுடன் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் நல்லாசியுடன் உள்ளாட்சித் தேர்தலில் நின்ற இயக்க சகோதரர்களும் சகோதரி ஒருவரும் தோற்றுப் போய் இருக்கின்றார்கள்.
களத்தில் நின்ற வேட்பாளர்களில் ஒரே ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்ட வாணியம்பாடி இஸ்மாயில் சாகிபும் தோற்றுவிட்டார்.
 

ஒருபக்கம் இது வருத்தத்தை அளித்தாலும் மறு பக்கம் இந்தக் கன்னி முயற்சிக்குக் கிடைத்திருக்கின்ற ஆதரவு மகிழ்ச்சி அளிக்கின்றது. நம்முடைய வேட்பாளர்களுக்குக் கிடைத்திருக்கின்ற ஒவ்வொரு வாக்கும் மதிப்பு மிக்க வாக்குகளாகும்.
 

கட்சியின் மீதுள்ள விசுவாசத்தின் காரணமாக விழுந்த வாக்குகள் அல்ல அவை. புதியதொரு விடியலுக்காக மக்கள் அளித்துள்ள விசா பத்திரங்கள் அவை.
 

மதத்தின் அடிப்படையிலோ சாதிச் சார்பு நிலையால் உந்தப்பட்டடோ பதிவான வாக்குகள் அல்ல அவை. மக்கள் பணம் மக்களுக்கே என்கிற சிந்தனைக்கு ஆதரவாக எழுச்சியுடன் வாக்குச் சாவடிகளுக்கு வந்த நல்லவர்களின் ஆதரவு பத்திரங்கள் அவை.
 

பணத்துக்காக விழுந்த பருக்கைகள் அல்ல அவை. நல்லவர்களின் சேவை இந்த நாட்டுக்குத் தேவை என்கிற நல்லெண்ணத்திற்குக் கிடைத்த ஆதரவுத் தூண்கள் அவை.
 

வோட்டு வீணாகக் கூடாது; நான் போடுகின்ற ஆள் ஜெயிக்க வேண்டும் என்கிற குழந்தைத்தனமான சிந்தனையுடன் பதிவான வாக்குகள் அல்ல அவை. மக்கள் நல அரசாங்கம், அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்கின்ற மக்களாட்சி, சமூக நல்லிணக்கம் ஆகிய உயர்ந்த கொள்கைகளுக்கு ஆதரவான நல்லவர்களின் முத்திரை முழக்கங்கள் அவை.
 

ஆக, நமக்கு ஆதரவாக வாக்களித்த இந்த நல்லிதயங்களுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். நம் மீது அவர்களுக்கு இருக்கின்ற நம்பிக்கையைத் தக்க வைத்துக்கொள்ள அனைத்தையும் செய்ய வேண்டும். இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். இன்னும் அதிகமாகப் பாடுபட வேண்டும்.
 

அதே சமயம் இந்தத் தோல்வி ஏன் என்பதைக் குறித்து நாம் அனைவரும் யோசிக்க வேண்டிய, ஆய்வு செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
 

முதலில் இந்தத் தேர்தல் களத்தில் கன்னி முயற்சியாகக் களத்தில் நின்ற சகோதரர்களும் சகோதரிகளும் பாராட்டுக்குரியவர்கள். இறைவன் அவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பைக் கொடுத்தான். அதனை அவர்கள் மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அல்லாஹ்விடம் அவர்களுக்கு அவர்களுடைய உழைப்புக்காக, முயற்சிகளுக்காக, செலவிட்ட நேரத்திற்காக, பொருளுக்காக திண்ணமாக நற்கூலியும் நல்லருளும் உண்டு.
 

மக்களைச் சந்திப்பதற்கும் மக்களின் பிரச்னைகளை அறிந்துகொள்வதற்கும் மக்களின் எண்ணங்களைத் தெரிந்துகொள்வதற்கும் இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. நம்முடைய வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தித்தார்கள். அவர்கள் அனைவருமே 

இப்போது மக்கள் மனங்களில் ஒரளவுக்கு அறிமுகமானவர்களாக ஆகிவிட்டார்கள். இந்த அறிமுகமும் பெயரும்தான் இனி வருங்காலத்தில் பெருவெற்றி பெறுவதற்கும் முத்திரை பதிப்பதற்கும் மூலதனமாகும். இதனை வைத்து நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய தேவையையும் அவசியத்தையும் யாருமே மறுக்க முடியாது.
Read Moulana Moududi on electoral victory

No comments:

Translate

Related Posts Plugin for WordPress, Blogger...