Pages

Friday, May 27, 2011

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி பேட்டி!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தன்னுடைய குறிக்கோளை அடைவதற்கான போராட்டத்தைத் தொடரும்! 
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி பேட்டி!

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் அமீரே ஜமாஅத்தாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஏப்ரல் 6 அன்றே தஅவத் இதழுக்காக அவருடன் உரையாட முயன்றேன். ஆனால் மௌலானா ஷஃபி மூனிஸ் சாகிப் இறந்துவிட்டதால் அன்றைய தினம் மௌலானா அவர்களுடன் பேசுவதற்கு வாய்ப்பும் நேரமும் வாய்க்கவில்லை. மத்தியப் பிரதிநிதிகள் சபையின் கடைசி அமர்வையும் தள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எப்பாடு பட்டாவது ஏப்ரல் 31 ஆம் தேதியிட்ட தஅவத் இதழில் அமீரே ஜமாஅத் அவர்களின் பேட்டியை வெளியிட வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. ஆனால் மௌலானா அவர்களோ அடுத்தடுத்த தினங்களில் இன்னும் அதிகமாகப் பிஸியாகிவிட்டார். சுற்றுப்பயணங்கள் வேறு! இந்த நிலைமையில் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா தொடங்கப்பட்டுவிட அது தொடர்பான கேள்விகளையும் சேர்க்க வேண்டியதாயிற்று. இவ்வாறாக, பல்வேறு பிரச்னைகள், வாய்ப்புகள், சவால்கள் குறித்து மௌலானா அவர்களுடன் பல மணிநேரம் பேசுகின்ற வாய்ப்பு கிடைத்தது.வெவ்வேறு நாட்களில் மூன்று அமர்வுகளில் இந்த உரையாடல்கள் நடந்தன. மௌலானா அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் எல்லாவற்றைக் குறித்தும் விரிவாக விடையளித்தார். பேட்டி நீண்டுவிட்டதால் மௌலானா அவர்களின் அனுமதியுடன் சில கேள்விகளுக்கான விடைகளின் சில பகுதிகளை நீக்கி சுருக்க வேண்டி வந்தது. இவ்வாறாக, பல்வேறு விஷயங்கள் குறித்து ஒருங்கிணைந்த, இரத்தினச் சுருக்கமான, நிறைவான விடைகள் தொகுத்துத் தரப்படுகின்றன.  பேட்டியின் தொகுப்பை அமீரே ஜமாஅத் அவர்களும் ஒரு பார்வை பார்த்துக் கொடுத்துள்ளார்.
சற்றே காலதாமதமாக இந்த நேர்காணல் அச்சானாலும் மன நிறைவைத் தரும் என்று எதிர்பார்க்கின்றேன். முஸ்லிம் உம்மத், இஸ்லாமிய இயக்கம், நாட்டுப் பிரச்னைகள், சமுதாயச் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டுள்ள அனைவரும் இதனை வாசித்துப் பயன் பெறுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. நாட்டுநடப்பு, நிகழ்வுகள் பற்றிய மௌலானாவின் தாக்கங்களும், எண்ணங்களும் அவ்வப்போது வழங்கப்படும். இன்ஷா அல்லாஹ்!
- பர்வாஸ் ரஹ்மானி, ஆசிரியர், தஅவத் வாரம் இருமுறை


m ஜமாஅத் உறுப்பினர்கள் மீண்டும் ஒரு முறை உங்களைத் தங்களின் அமீராகத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். மிகப் பெரும் பொறுப்பை உங்கள் மீது சுமத்தியிருக்கின்றார்கள். நீங்கள் எப்படி உணர்கின்றீர்கள்?

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி:
முதல் தடவையாக என் மீது இந்தப் பொ-றுப்பு சுமத்தப்பட்ட போது இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்குத் தேவையான அறிவாற்றல், இறையச்சம், இறைப்பற்று, ஞானம், மதிநுட்பம், அர்ப்பணிக்கும் பண்பு, இறைவழியில் நிலைத்து நிற்றல் போன்ற அனைத்திலும் மற்றவர்களை விட கடைகோடியில் இருப்பவனாகத் தான் என்னை நானே பார்த்தேன். நான்கு ஆண்டுகள் இந்தப் பொறுப்பைச் சுமந்த பிறகு அந்த உணர்வு இன்னும் கூடியிருக்கின்றது.
உண்மை என்னவெனில், வாழ்க்கைத் திட்டம் பற்றிய புரட்சிகரமான பார்வையைக் கொண்ட, தனிப்பட்ட வாழ்விலும் கூட்டு வாழ்விலும் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த விழைகின்ற, இந்த நோக்கத்திற்காக நாடு முழுவதிலும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்ற ஒரு இயக்கத்துக்குத் தலைமை தாங்குவதும் வழிகாட்டுவதும் சாதாரண வேலை அன்று. ஆனால் ஜமாஅத் இந்த எளியவன் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். கடந்த நான்காண்டுகளில் இயக்கத் தோழர்களும் நண்பர்களும் எனக்கு அளித்த ஆதரவும் ஒத்துழைப்பும் எனக்கு மனநிறைவைத் தருகின்றது; என்னுடைய கவலையைப் போக்குகின்றது. அல்லாஹ்வின் தனிப்பெரும் கிருபைக்கும் அருளுக்கும் அடுத்ததாக இயக்கத் தோழர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அசாதாரணமான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இனி வரும் நாட்களிலும் எனக்கு இந்த ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைத்துக் கொண்டே இருக்கும் என்றும் இயக்கம் வெற்றிப்பாதையில் மேன்மேலும் முன்னேறிச் செல்லும் என்றும் நம்புகின்றேன். இன்ஷா அல்லாஹ்

m மத்திய தலைமையகச் சூழலைக் குறித்துச் சொல்லுங்களேன். அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியத் தலைமையகத்துடன் இணைந்து இருந்திருக்கின்றீர்கள். பன்னிரு ஆண்டுகள் அகில இந்தித் துணைத் தலைவராக (1991-இலிருந்து) செயல்பட்டிருக்கின்றீர்கள். எனவே மத்தியத் தலைமையகமும் அதன் சூழலும் உங்களைப் பொறுத்த வரை அந்நியமான சூழல் கிடையாது. என்றாலும் நீங்கள் அமீரே ஜமாஅத்தாகச் செயலாற்றிய இந்த நான்கு ஆண்டுகளில் மத்தியத் தலைமையகச் சூழல் குறித்து உங்களுடைய உணர்வுகளைக் கூறுங்களேன்

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி:
இந்தக் கேள்வி இரண்டு பரிமாணங்களைக் கொண்டது. முதலா-வது மத்தியத் தலைமையகத்தில் இருப்பவர்கள் ஒருவருக்-கொருவர் கொண்டுள்ள உறவு பற்றியது. இந்தக் கோணத்-தில் பார்த்தால் மனம் மகிழ்ச்சியால் நிறைகின்றது. மத்தியத் தலைமையகத்தில் பணியாற்றுகின்ற பொறுப்பாளர்கள், ஊழியர்கள்  மத்தியில் அன்பும் இணக்கமும் தூய எண்ணமும் நிறைந்த உறவும் தொடர்பும் நிலைபெற்றுள்ளது. அவர்கள் அனைவருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் இந்த எளியவனுக்குத் தொடர்ந்து கிடைத்து வந்துள்ளது. தலைமையகத்தில் இருக்கின்ற நாம் அனைவருமே ஒரே டீமாக, குழுவாகச் சேர்ந்து செயலாற்றி வருகின்றோம்.
இரண்டாவது பரிமாணம் இறைத்தொடர்பு, தஸ்கியா ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும். இந்தக் கோணத்தில் பார்த்தால் சில தோழர்கள் மிக மிக பாராட்டத்தக்க அளவில் தங்களை வளர்த்துக் கொண்டுள்ளார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் நம் எல்லோருக்கும் ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாக இருக்கின்றார்கள்.
சில சகோதரர்களிடம் சில பலவீனங்கள் காணப்படுகின்றன. ஆனால் தங்களின் பலவீனங்களை அவர்கள்  உணர்ந்திருக்கின்றார்கள். இது மகிழ்ச்சியளிக்கும செய்தியாகும். சகோதரர்களுக்கு அவர்களிடம் இருக்கின்ற பலவீனங்கள் குறித்து உணர்த்தும்போது எவருமே முகம் சுளித்ததில்லை; அதிருப்தியடைந்ததில்லை. இனி வருங்காலத்தில் அவர்கள் தங்களின் பலவீனங்களைக் களைந்து கொள்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருக்கின்றது.
 
Parvaz Rahmani, Editor, Dawat interviews Moulana Syed Jalaludeen Umari, Ameer-e-Jamaat. Translated by T Azeez Luthfullah. More Here

No comments:

Translate

Related Posts Plugin for WordPress, Blogger...