Pages

Friday, February 11, 2011

"மக்கள் புரட்சி இது வரை பார்க்காத ஒன்று..." எகிப்திலிருந்து நேரடி ரிப்போர்ட்

மக்கள் புரட்சி இது வரை பார்க்காத ஒன்று... இந்தியாவில் இது போல நடக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.  இது ஒருவிதமான மெஷின் புரட்சி என்று கூட சொல்லலாம்.  வலைத்தளங்களும், சமூகவலைத்தளங்களும், ப்ளாக்குகளும் பேசிக் கொண்டிருந்த ஒரு விஷயம்.  இளைஞர்கள் மட்டுமே அதிகம் புழங்கும், டிவிட்டர், பேஸ்புக், ப்ளாக்ஸ்பாட், ஆர்குட் என்ற மேடையில் ஒத்திசையாய் பேசப்பட்ட விஷயங்கள்.  கருத்து சுதந்தரம், பேச்சு சுதந்தரம், ஊழலற்ற ஆட்சி, அரசு இயந்திரங்கள், போலீஸின் அராஜகம் என்றெல்லாம் கருத்து பரிமாற்றங்களாய் இருந்த ஒரு விஷயம், ஒரு வலை அழைப்பாய் மாறியது. 25 ம்தேதி இந்த போராட்டம் நடைபெறும் போது பெரும்பாலும் இளைஞர்களும், இளைஞிகளும் தான். மெதுவாக அந்த நாளின் இறுதியில் தொழில் வல்லுனர்கள், மருத்துவர்கள், அமெரிக்க நிறுவனங்களில் வேலைபார்க்கும் எகிப்தியர்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என்று பலதரப்பட்ட மனிதர்களும் கூட ஆரம்பித்தார்கள்.  அன்றைய தினத்தில் போலீஸின் கையில் அதிகாரம் தரப்பட்டிருந்தது. கலவரத்தை ஒடுக்க, துப்பாக்கிகளில் ரப்பர் குண்டுகள் வைத்து வெடிக்கப்பட்டன, கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. ஒருவர் உயிரிழந்தார்.

26ம் தேதி அங்காங்கே சிறு சிறு ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு ஊர்வலங்கள் நடந்தன.  சூயஸ், அலெக்ஸாண்டிரியா, கெய்ரோ, லக்ஸர் என்று.  இதில் பெரிய பாதிப்புகள் இல்லை.  அன்று வரை தொலைபேசிகள், வலை, அழைபேசிகள் எல்லாம் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருந்தன.  ஒரு கூகிள் ஊழியர், அமெரிக்காவில் இருந்து சொந்த வேலை இருப்பதாக, எகிப்து வந்தவனை காணவில்லை. சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்ட வாயல் கோனிம் என்ற முப்பது வயது இளைஞனைக் காணவில்லை. எல்லோரும் தேடினார்கள், கூகிளும் தேடியது கிடைக்கவில்லை.  எல்லா சோஷியல் நெட்வொர்க், மீடியாக்களில் இந்த போராட்டங்கள் பிரதான இடத்தைப் பிடித்தன. அல் ஜசிரா எல்லாப் போராட்டங்களையும் ஒளிபரப்பினார்கள், பாதிக்கப்பட்ட தனிமனிதர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பத்திரிக்கையாளர்கள், நிருபர்கள் என்று எல்லோரின் கதைகளையும் ஒளிபரப்பியது அல்ஜெசிரா.  பழைய கதைகளை, முபாரக்கின் அடக்குமுறைகள்  நடந்த ஐந்து வருடத்திற்கு முன்னால் நடந்த கதைகளை அவர்களின் பேட்டிகளுடன் காண்பித்தது.  போலீஸின் அராஜகம் காட்டப்பட்டது, டிவியின் முன்னால் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் ஆவேஷம் வந்தது.

வெள்ளிக்கிழமை என்று முடிவானது.  நாங்கள் கிஸ்ஸா போய்விட்டு, சக்காராவிற்கு சென்று ஸ்டெப் பிரமிடு பார்ப்பதற்கு கிளம்பிய வழிகளில் எல்லாம் போராட்டங்கள். வாகன எரிப்புகள் என்று போராட்டம் அப்போது தான் எங்கள் கவனத்திற்கு வந்தது. சக்காரா போகமுடியவில்லை.  கெய்ரோ ஏர்போர்ட் தாண்டி போகும்வழியில் பெரிய போராட்டக்கூட்டம். எகிப்தின் கொடிகள், உயரத்தூக்கியப்படியே சட்டையில்லாமல் ஓடிய இளைஞன், ஒரு போலீஸ் வாகனத்தைப் பார்த்து கத்த, மொத்தக் கூட்டமும் அந்த பக்கம் திரும்பியது. மொத்தமாக எங்களுடைய அழைபேசிகள் வேலை செய்யவில்லை.  அந்த இடத்தை கடந்து இஸ்மாலியா போய்விட முடியுமா என்று தெரியவில்லை.  போவது உசிதமில்லை என்று முடிவானது. 

என் நண்பன்  அவனுடைய நண்பனின் நண்பன் வீடு இங்கு எங்கோ இருப்பதாகவும், விசாரித்துப் போய் விடலாம் என்று கூறினான். வழி சரியாத் தெரியாது, போனில் விசாரிக்க முடியாது என்ன செய்வது என்று தெரியாமல் வண்டியை மாற்றி இடத்தை சொல்லி, டிரைவரிடம் சொல்ல, அவன் பாதுகாப்பில்லை என்றும் தான் திரும்பி இஸ்மாலியா போகப்போவதாகவும் சொல்ல, நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல், அவனிடம் பாஷை தெரியாத நாங்களும் கெஞ்ச திரும்பவும் ஹீலியா போலீஸ் இடத்தை சுற்ற ஆரம்பித்தோம்.  விவேக்கிற்கு இடமா வலமா என்ற குழப்பத்தில் நேரத்தை விரல் வழி நழுவ விட்டுக் கொண்டே இருந்தோம். அப்போது ஒரு அபார்ட்மெண்ட் வாசலில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு செக்யூரிட்டி. அவரிடம் போய் இடம் பற்றி விசாரிக்கச் செல்ல டிவியில் காட்டிய படங்கள் எங்களை உலுக்கிவிட்டது.  சூயஸ் பற்றி எரிகிறது. இஸ்மாலியாவின் அரசு அலுவலகத்தின் முன்னால் கலவரம். என்ன செய்வது என்று தெரியாமல் அவரிடம் விவேக் அரபிக்கில் பேச, அவர் நாலாவது மாடியில் இந்தியர் ஒருத்தர் இருப்பதாகச் சொன்னார்.

இந்தியர் என்ற ஒரு வார்த்தை போதாதா நமக்கு, லிப்டில் ஏறி நாலு பொத்தானை அமுத்தி மேலேறிய போது, கலவரமான என் மனைவியின் முகம் எனக்கு மேலும் கலவரத்தைக் கொடுத்தது. அவர் இப்போ இல்லேன்னா என்ன பண்றது என்ற என் மனைவியின் கேட்க, வெள்ளிக்கிழமை பெரும்பாலும் வெளியே போவதில்லை இந்தியர்கள் என்றான்.  போய் அழைப்பு மணி அழுத்தியதும் வந்து திறந்தவன் இன்னுமொரு விவேக்... தேடிக்கொண்டிருந்த அதே நாள், அட பழைய சினிமா மாதிரி இருக்கேண்ணு ஆச்சரியமாய் இருந்தது. அவன் வீட்டில் வந்தபிறகு தான் இண்டர்நெட் இல்லை என்பதும், தொலைதொடர்பு எல்லாம் துண்டிக்கப்பட்டதும் தெரிந்தது.  அல்ஜெசிராவின் செய்திகளில் பார்த்த வன்முறையும் துப்பாக்கிச்சுடும் எங்களை நிம்மதி இழக்கச்செய்தது. ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்தது, ஆனால் அதை யாரும் இன்றுவரை பொருட்படுத்தவில்லை.

அன்றைய கலவரத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.  வாகனங்கள் எரிக்கப்பட்டது.  முபாரக்கின் கட்சி அலுவலகம் தீயிடப்பட்டது. எங்கள் டிரைவர் எங்களை பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட்டதால், கிளம்பிச் சென்றுவிட்டான். நாங்கள் காலையில் இஸ்மாலியா போய்விடலாம் என்று முடிவானது. போராட்டம் வலுப்பெற்றுக் கொண்டே இருந்தது. முபாரக் அன்று இரவே தனது கேபினெட்டை கலைத்தார். புதிய பிரதம மந்திரி நியமிப்பதாய் அறிவித்தார். 

மக்கள் போராட்டம் வலுப்பெற, எல்லா பள்ளிகளும், கல்லூரிகளும், வங்கிகளும், அரசு அலுவலகங்களும், தனியார் தொழிலகங்களும் காலவரையற்று மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  அடுத்த நாள் காலை இஸ்மாலியா திரும்பினோம்.  போராட்டங்களில் அடிபட்டவர்களுக்கு, போராட்டக்குழுவில் இருந்த மருத்துவர்களே சிகிச்சை செய்தார்கள்.  சூயஸ், அலெக்ஸாண்ட்ரியா, லக்ஸர், கெய்ரோ என்று எல்லா இடங்களிலும் வன்முறையும் கலவரங்களும் வெடித்தது.  போலீஸ் நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. போலீஸ் அலுவலர்கள் எல்லோரும் மறைவிடத்தில் பதுங்கினர்.  அரசு அவர்களை கலவர இடங்களில் இருந்து திரும்ப பெற்றுக் கொண்டது. அல்ஜெசிராவின் அரபிக் சேனல் நிர்வாகி கைது செய்யப்பட்டார். அல்ஜெசிராவின் அரபிக் சேனல், போட்டோகிராபர் தாக்கப்பட்டு, கேமிரா பிடுங்கப்பட்டு, சேனல் முடக்கப்பட்டது. அல்ஜெசிரா இந்த போராட்டம் வலுப்பெற்றதற்கு ஒரு காரணியாய் அறியப்படுகிறது.

எல் பாராதேயின் பங்கு என்ன இந்த போராட்டங்களில் என்று கேட்டால் ஒன்றுமில்லை. ஆனால் எல் பாராதே அரசாங்கத்திற்கு எதிரான ஒரு பிரச்சாரகராய் அறியப்படுகிறார். இசுலாமிய சகோதரத்துவம் என்ற கட்சியில் இருந்து தேர்தலில் பங்குபெற்று, தேர்தலின் முறைகேடுகளால் கீழே தள்ளப்பட்டவர். சட்ட வல்லுனரான எல் பாராதே, ஐநாவின் சர்வதேச கூட்டுமுயற்சியான சர்வதேச அணுசக்தி மையத்தின் டைரக்டர் ஜெனரலாக பதவி வகித்தவர்.  நோபல் பரிசு பெற்றவர்.  இவரின் தலைமையையும் மக்கள் ஏற்க தயாராக இல்லை. மக்கள் தலைவர்களின் வழி நடத்துதல் இல்லாமல் ஒரு PURE FORM OF REVOLUTION MODE ல் இருக்கிறார்கள்.  தலைவர் இல்லாததாலும், சீரிய வழி நடத்துதல் இல்லாததாலும் தான் இந்த போராட்டம் இத்தனை நாள் நீடிப்பதற்குக் காரணம்.  எல் பாராதே வந்து இறங்கியதும் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

முபாரக்கின் அரசில் எகிப்திய பொது உளவு பணியகத்தின் தலைவராய் பணியாற்றி வருகிற ஓமர் சுலைமானை, அவசர அவசரமாக துனை அதிபராய் ஆக்கினார் முபாரக். ஓமர் சுலைமான் ஏறக்குறைய முபாரக்கின் வழியில் வந்தவர். பூரண ஆங்கில அறிவு அவரை, அமெரிக்காவுடனான வெளியுறவு, உளவுத்துறையில் நண்பர்களை சம்பாதித்துக் கொடுத்தது.  முபாரக்கைப் போலவே படித்தது மிலிடெரி அகாடெமி... சோவியத் யூனியனின் ஃப்ருன்ஷே மிலிடெரி அகாடெமியில் பயிற்சி பெற்றவர்.  பதவி ஏற்றதும் ஓமர் சுலைமான் செய்த காரியங்கள். ஏர் போர்ஸின் ஜெட் விமானங்களை போராட்டம் நடக்கும் கூட்டங்களுக்கு மேலே தாழ பறக்க வைத்து பயங்காட்ட முனைந்தது.  போலீஸ் ஆட்களை சாதாரண உடைகளை அணியவைத்து, ஒட்டகங்கள், குதிரைகளின் மீது வந்து  முபாரக்கின் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் அராஜகம் செய்ய வைத்தது, போராட்டக்காரர்களை தாக்க வைத்தது.  இது போராட்டக்காரர்களுக்கு சிறிது அச்சத்தைக் கொடுத்தாலும், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களிடம் இருந்து வந்த எதிர்ப்பினால் அடங்கியது. ஒவ்வொரு நாளும் நடக்கும் போராட்டத்திற்கு ஒரு பெயர் வைக்கப்பட்டது... நிஜமாகவே பத்து லட்சத்திற்குமேல் கூடிய கூட்டத்தை பார்த்திருக்கிறீர்களா?
8 ம்தேதி கூடிய கூட்டம் அதற்கும் மேல்... வர்த்தகமுடக்கம், தொழில் உற்பத்தி பாதிப்பு என்று எத்தனையோ இருக்கிறது... புத்தகம் போடலாம். 

From a gripping narration by Raghavan in his blog. More Here.

No comments:

Translate

Related Posts Plugin for WordPress, Blogger...